Tuesday, 19 February 2013
Sunday, 17 February 2013
ஒரே ஒரு பல்லி.
உயரமாக எழுப்பிக் கட்டப்பட்ட வகுப்பறையின்
மிகப் பெரிதான சன்னலின் வலது ஓரத்தில்
எப்போதும் இருக்கும்.
பல கிளைகளாய் பரவி
பல திசைகளில் ஓடிக் கொண்டிருக்கும் மின்சார வயர்களின் நடுவே
ஒய்யாரமாய் தூங்கிக் கொண்டிருக்கும்.
நகர்தல்-மிக அரிதாக நடக்கும்.
அதுவும் மிதமான வேகத்தில் மட்டுமே.
பலவருட வாசம் என்பது கொழுத்த
உருவத்திலிருந்து தெளிவாய்
புரிபடும்.
எந்நேரமும் சயனம்தான்.
வகுப்பின் சூழ்நிலை மாற்றங்களின் போது வாலாட்டுதலின் மூலம் தன்
இருப்பை உணர்த்தும்.
அவ்வப்போது சன்னல் வழியாக வெளியே பார்ப்பது உண்டு.
மனிதர்களால் முழுதாக அனுபவிக்க முடியாத சுதந்திரம்-
நிறைந்திருக்கிறது அதனிடம் !
வகுப்பு முடிந்ததும்
மாணவர்களை துரத்திவிட்டு அறையை பூட்டும் அண்ணனுக்கு
தெரிய வாய்ப்பில்லை-
வகுப்பு காலியாய் இல்லை என்பதும்,
உள்ளே ஒரு ஆத்மா நிரந்தரமாய் குடி இருப்பதும் !!
சலனங்களோடு
ஏற்றிக்கொண்ட நினைவுகளை
சத்தமின்றி அசை
போடுகிறேன் ...
பயணங்கள் –
உடலை மட்டுமே
இடம் பெயர்க்கின்றன...
எண்ணங்களை கடத்த
எவற்றாலும்
முடியவில்லை...
நெஞ்சின்
நினைவுகள்-
மையத்தை சுற்றும்
கடிகார முட்கள் போல்...
திரும்பும் திசை
எதுவாகினும்
குவிமய்யமாய்
எப்போதும் நீ!!
கிளம்பும்
தருணத்தில் நிகழ்ந்த சிறு ஊடல் தந்த வலியும்
நினைவுகளின் உடன்
வருகிறது...
ஏதேனும் ஒரு
நிறுத்தத்தில்
வலியை
இறக்கிவிட்டு
நினைவுகளை
மட்டும் உடன் சுமக்க விழைகிறேன்....
ஏனோ நிறுத்தங்கள்
வரும் போது மனதின் கதவுகள் இறுக்கமாய் மூடிக்கொள்கின்றன...
இறக்க நினைக்கும்
வலியோ
உள்ளிருக்கும்
நினைவுகளை துளைத்து
உட்சென்று
குடியமர்கின்றது...
மெல்லப்
புரிகிறது
வலியின் இருப்பு
நினைவுகளின்
சுகத்தை அதிகரிப்பது...
வலியின் ஊடாக
எட்டிப்
பார்க்கும் நினைவுகள்
தரும் கணமான
சுகம்
உயிரை முழுதாக
நிரப்புகிறது ...
நிரம்பிய உயிர்
..
நிலைத்த
எண்ணம்...
இவற்றுடன்
உனக்கான
காத்திருப்பில்
நான்...!!
பேச நினைக்கும்
தருணங்களில்
மௌனம் கொலைக்களன் ....
பிரளயமாய் பிரவாகமெடுக்கக் காத்திருக்கும் என் சொற்களுக்கு
அனுமதியில்லை உன்னிடமிருந்து....
வெகுநேரம் அருகருகே அமர்ந்திருந்தும்
இணக்கம் இல்லாத இருமனம்....
வார்த்தைகளால் வெளிப்படாத உன் சலனம்
தெள்ளத்தெளிவாய் உன் முகத்தில்....
பேச மறுக்கிறாய்...
கேட்கவும் மறுக்கிறாய்...
கேள்விகளும் பதில்களும் இல்லாமல்
கேள்விக்குறியாகிறது நம் உறவு...!
நடக்கிறேன்,
உடன்
நடக்கிறாய்...
நிற்கிறேன்
,
உடனே
நிற்கிறாய்...
உனை
நான் பார்க்க,
எனை நீ பார்க்கிறாய்...
நீ அழகென நான் பார்த்தால்,
நான் அழகென உணர வைக்கிறாய் ...
காதலிக்கிறேன்,
காதலில் கரைகிறாய்...
சண்டையிட்ட நண்பனைப் போல ,
மறைந்து சிரிக்கிறாய்...
நேரில் முறைக்கிறாய்...
நான் எதிர்நோக்கிக் காத்திருக்க,
நீ எட்டிப் பார்த்துக் கண்ணடிக்க என
நானும் நீயுமாய் சேர்ந்து
இனிக்கவைக்கும் இந்த இரவு
நீள வழியுண்டா ?
சொல் நிலவே !!
Subscribe to:
Comments (Atom)
