Thursday 18 September 2014

இரையாகிய நான்

















உயிரின் இருண்ட முடுக்குகளில்
உறைந்திருக்கும் பறவை வெளியேறிய ஓர் இரவு!
ஆன்மாவில் தங்கிவிட்ட பிணுக்குகளை
கொத்தித்தின்னத் துவங்கிய நேரம் !
என்னை மன்னிக்க முடியாத நான்,
கடந்து போய்விட்ட நடந்து முடிந்தவைகளின் மிச்சங்களில்
திறந்த கண்களுடன் புரண்டுகொண்டிருந்தேன் !
நேற்று இன்று என்று பிரித்தறிய முடியா வெளியில்
மிதந்து கொண்டிருந்தோம்
நானும் நான் அல்லாதவர்களும்!
பிணம் கொத்தும் கழுகாய் ஆன்மாவின் அழுக்கைத்
தின்று கொண்டிருந்தது பறவை!
இலகுவாகிவிடும் விரசத்தில் இறையிட்டுக்கொண்டிருந்தேன்
தூக்கமில்லா இரவில் துணைக்கு வந்த பறவைக்கு!
பிணுக்குகளை மட்டுமல்லாமல்
உயிரின் துணுக்குகளையும்!

Tuesday 19 February 2013

கொட்டிச் சென்ற
மழையின் முடிவை உணர்த்தும்
இலையிலிருந்து சொட்டும்
கடைசி நீர்த்துளி !!

Sunday 17 February 2013



                                                                                 

ஒரே ஒரு பல்லி.
உயரமாக எழுப்பிக் கட்டப்பட்ட வகுப்பறையின்
மிகப் பெரிதான சன்னலின் வலது ஓரத்தில்
எப்போதும் இருக்கும்.
பல கிளைகளாய் பரவி
பல திசைகளில் ஓடிக் கொண்டிருக்கும் மின்சார வயர்களின் நடுவே
ஒய்யாரமாய் தூங்கிக் கொண்டிருக்கும்.
நகர்தல்-மிக அரிதாக நடக்கும்.
அதுவும் மிதமான வேகத்தில் மட்டுமே.
பலவருட வாசம் என்பது கொழுத்த உருவத்திலிருந்து தெளிவாய்
புரிபடும்.
எந்நேரமும் சயனம்தான்.
வகுப்பின் சூழ்நிலை மாற்றங்களின் போது வாலாட்டுதலின் மூலம் தன்
இருப்பை உணர்த்தும்.
அவ்வப்போது சன்னல் வழியாக வெளியே பார்ப்பது உண்டு.
மனிதர்களால் முழுதாக அனுபவிக்க முடியாத சுதந்திரம்-
நிறைந்திருக்கிறது அதனிடம் !
வகுப்பு முடிந்ததும்
மாணவர்களை துரத்திவிட்டு அறையை பூட்டும் அண்ணனுக்கு
தெரிய வாய்ப்பில்லை-
வகுப்பு காலியாய் இல்லை என்பதும்,
உள்ளே ஒரு ஆத்மா நிரந்தரமாய் குடி இருப்பதும் !!
சலனங்களோடு ஏற்றிக்கொண்ட நினைவுகளை
சத்தமின்றி அசை போடுகிறேன் ...
பயணங்கள்
உடலை மட்டுமே இடம் பெயர்க்கின்றன...
எண்ணங்களை கடத்த
எவற்றாலும் முடியவில்லை...
நெஞ்சின் நினைவுகள்-
மையத்தை சுற்றும் கடிகார முட்கள் போல்...
திரும்பும் திசை எதுவாகினும்
குவிமய்யமாய் எப்போதும் நீ!!
கிளம்பும் தருணத்தில் நிகழ்ந்த சிறு ஊடல் தந்த வலியும்
நினைவுகளின் உடன் வருகிறது...
ஏதேனும் ஒரு நிறுத்தத்தில்
வலியை இறக்கிவிட்டு
நினைவுகளை மட்டும் உடன் சுமக்க விழைகிறேன்....
ஏனோ நிறுத்தங்கள் வரும் போது மனதின் கதவுகள் இறுக்கமாய் மூடிக்கொள்கின்றன...
இறக்க நினைக்கும் வலியோ
உள்ளிருக்கும் நினைவுகளை துளைத்து
உட்சென்று குடியமர்கின்றது...
மெல்லப் புரிகிறது
வலியின் இருப்பு
நினைவுகளின் சுகத்தை அதிகரிப்பது...
வலியின் ஊடாக
எட்டிப் பார்க்கும் நினைவுகள்
தரும் கணமான சுகம்
உயிரை முழுதாக நிரப்புகிறது ...
நிரம்பிய உயிர் ..
நிலைத்த எண்ணம்...
இவற்றுடன்
உனக்கான காத்திருப்பில்
நான்...!!

எங்கெங்கோ வைத்த புள்ளிகளை 
ஒன்றாய் சேர்த்து 
கோலமாக்கிடும் கைகள்!!
எப்போதோ நடந்த நிகழ்வுகளை 
எப்படியோ இணைத்து 
கதைகள் செய்திடும் மனம்!!
நினைத்து பார்த்து 
நிம்மதி அடைந்தேன்...
உறுதியானது-
பெண்ணாய்
மிகச்சரியாய் 
நான் இருப்பது!!!



பேச நினைக்கும் தருணங்களில்
மௌனம் கொலைக்களன் ....
பிரளயமாய் பிரவாகமெடுக்கக் காத்திருக்கும் என் சொற்களுக்கு
அனுமதியில்லை உன்னிடமிருந்து....
வெகுநேரம் அருகருகே அமர்ந்திருந்தும்
இணக்கம் இல்லாத இருமனம்....
வார்த்தைகளால் வெளிப்படாத உன் சலனம்
தெள்ளத்தெளிவாய் உன் முகத்தில்....
பேச மறுக்கிறாய்...
கேட்கவும் மறுக்கிறாய்...
கேள்விகளும் பதில்களும் இல்லாமல்
கேள்விக்குறியாகிறது நம் உறவு...!


கணக்கிலடங்கா வார்த்தைகள் 
காற்றில் எந்நேரமும் மிதந்துகொண்டிருக்க 

சரியான நேரத்தில் நடந்த 
தவறான வார்த்தைப் பிரயோகத்தால்,
எங்கேயோ எப்போதோ 
முறிந்துகொண்டே இருக்கும் மனித மனங்களும் 
கூடவே மனிதமும் !!!!













நிதர்சனங்களைப் பேசும்போது மட்டும் 
நிறம் மறந்து விடுகின்றன-
வழக்கமான நேரங்களில் 
வாசகங்களை வண்ணமயமாக்கும் 
வார்த்தைகள் !!!