Sunday 17 February 2013



                                                                                 

ஒரே ஒரு பல்லி.
உயரமாக எழுப்பிக் கட்டப்பட்ட வகுப்பறையின்
மிகப் பெரிதான சன்னலின் வலது ஓரத்தில்
எப்போதும் இருக்கும்.
பல கிளைகளாய் பரவி
பல திசைகளில் ஓடிக் கொண்டிருக்கும் மின்சார வயர்களின் நடுவே
ஒய்யாரமாய் தூங்கிக் கொண்டிருக்கும்.
நகர்தல்-மிக அரிதாக நடக்கும்.
அதுவும் மிதமான வேகத்தில் மட்டுமே.
பலவருட வாசம் என்பது கொழுத்த உருவத்திலிருந்து தெளிவாய்
புரிபடும்.
எந்நேரமும் சயனம்தான்.
வகுப்பின் சூழ்நிலை மாற்றங்களின் போது வாலாட்டுதலின் மூலம் தன்
இருப்பை உணர்த்தும்.
அவ்வப்போது சன்னல் வழியாக வெளியே பார்ப்பது உண்டு.
மனிதர்களால் முழுதாக அனுபவிக்க முடியாத சுதந்திரம்-
நிறைந்திருக்கிறது அதனிடம் !
வகுப்பு முடிந்ததும்
மாணவர்களை துரத்திவிட்டு அறையை பூட்டும் அண்ணனுக்கு
தெரிய வாய்ப்பில்லை-
வகுப்பு காலியாய் இல்லை என்பதும்,
உள்ளே ஒரு ஆத்மா நிரந்தரமாய் குடி இருப்பதும் !!

1 comment:

  1. வகுப்பின் கவனச் சிதறல்களால் உருவான கவிதை...

    ReplyDelete